Thursday, December 17, 2015

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்
பச்சை பசுஞ்சாணம் 5 லிட்டர்
பசுமாட்டு கோமியம் 4 லிட்டர்
பசும்பால் 3 லிட்டர்
நன்கு புளித்த தயிர் 2 லிட்டர்
பசுமாட்டு நெய் அரை லிட்டர்
இளநீர் 2
வாழைப்பழம் 12
சிறிதளவு சுண்ணாம்பு
நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம்
நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ
பச்சை பசு சாணி 5 கிலோவுடன், பசு மாட்டு நெய் அரை லிட்டரை கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும். தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை, சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கலக்கி, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருவேளை காலை, மாலை பலமுறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 20 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு.
30- 50 லிட்டர் நீரில் பஞ்சகவ்யா கலவையில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நிலத்தில் தண்ணீர் பாயும் நேரமும் ஊற்ற வேண்டும்
இவற்றை 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தொழுவுரத்தில் ஊற்றி மதிப்பூட்டல் செய்து பயிருக்கு போடலாம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயிர் வளர்சி நன்றாக இருக்கும்.
இவற்றை பயிருக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் அடித்தால் பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்
பசும்சாணம் -பக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள்
கோமியம்(யூரின்)- பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள்
பால் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள்
தயிர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்)
நெய் – விட்டமின்-A, -விட்டமின் B, கல்சியம், கொழுப்புகள்
இளநீர் – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்)
வாழைப்பழம் நொதிப்புநிலை தரவல்லதாகும். அதிக நுண்ணூட்டம் பெறுகின்றது
பஞ்சகவ்யத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிகமிக அதிகமாகவும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடனும் உள்ளது. பஞ்சகவ்ய தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி உள்ளது தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் உள்ளது மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் உள்ளது
பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
மா
பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொறுத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும்.
முருங்கை
முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும்.
கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

அமிர்த கரைசல்

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit


இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.


பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.

நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Friday, August 28, 2015

நேந்திரம்பழ பாயசம்


தேவையானவை:
நேந்திரம்பழம்-2
வெல்லம்-250கிராம்
தேங்காய்-1
ஏக்காய்த்தூள்-1டீஸ்பூன்
முந்திரிபருப்பு-20
நெய்-தேவைக்கு

 செய்முறை:

நேந்திரம்பழத்தை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதை நெய் விட்டு மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி வதக்கவும்.
வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி கரைந்ததும் வடிகட்டவும்.
தேங்காயில் முதல்,இரண்டாம் தேங்காய்ப்பால் எடுக்கவும்.
இரண்டாம்பால் ஊற்றிசூடாக்கி நேந்திரம்பழத்துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.
பழத்துண்டுகள் வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி நெய்யில் வறுத்த முந்திரி ,ஏலக்காய்ப்பொடி சேர்க்கவும். நல்ல வாசனையுடன் பாயாசம் பக்குவம் ஆனதும் முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.

குறிப்பு: சேர நாட்டில் அடிக்கடி செய்யப்படும் இந்த பாயாசத்தில் நேந்திரம் பழம் போடுவது வழக்கம்.அது கிடைக்காவிட்டால் அதற்கு பதில் நன்றாக கனிந்த ரஸ்தாளி வாழைப்பழத்திலும் செய்யலாம்.தேவைப்பட்டால் பச்சை கற்பூரம் சிறிது வாசனைக்காய் சேர்த்துகொள்ளலாம்